Tuesday, August 23, 2011


2010 11ம் கல்வியாண்டில் தேர்வான 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!


பதிவு செய்த நாள்   : 8/22/2011 16:6:26

சென்னை: சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடந்தது.  இதுசம்பந்தமாக, தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் தகுதியும் திறமையும் மிக்க ஆசிரியர்கள் 20112012ம் ஆண்டு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன்படி 1 முதல் 5ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள் 6 முதல் 10ம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள், 11, 12ம் வகுப்புகளுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர்கள், அரசு சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் இந்த கல்வியாண்டில் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 20102011ம் கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். மேலும், 45 சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடங்களும் 161 பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும் 139 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களும் விரைவில் நிரப்பபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, August 22, 2011


சென்னை, ஆக. 22-
 
சட்டசபையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
 
அதில் கூறி இருப்பதாவது:-
 
ஆசிரியர் தேர்வு வாரியம் http://trb.tn.nic.in என்ற வாரியத்தின் மூலம் காலி பணியிட விவரங்கள், தேர்வு அட்டவணைகள், தேர்வில் பெற்ற மதிப்பெண், வேலை வாய்ப்புக்கு பதிவு மூப்பு தேதி உள்பட பல்வேறு விவரங்கள் பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடப்பட்டு வருகிறது.
 
2010-11-ம் கல்வி ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3665 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். 45 சட்டக்கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும் 161 பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும், 139 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
 
100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் பலனாக 900 முதுகலை ஆசிரியர்களில் முக்கியமாக தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 100 பேர் தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
முதல்-அமைச்சர் தாராள மனதுடன் அளிக்கப்பட்ட ஆயிரம் பணியிடங்களில் 100 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் அடங்கும். பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிரியர் நியமனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
 
தொடக்கப்பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் எந்தவித ஒளிவுமறைவின்றி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 20, 2011

அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு பதிவுமூப்பு முறையா? போட்டித்தேர்வா? நாளை பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்படுகிறது



சென்னை, ஆக.21-


அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு பதிவுமூப்பு முறை கடைப்பிடிக்கப்படுமா? அல்லது போட்டித்தேர்வு நடத்தப்படுமா? என்பது பற்றி நாளை நடக்கும் பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்படுகிறது.


ஆசிரியர் நியமனம்
தற்போது அரசு பள்ளிக்கூடங்களில் இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.


இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (2001-2006) வரை இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் தவிர பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட்டார்கள். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்திற்கு தற்போது இருக்கும் பதிவுமூப்பு முறை பின்பற்றப்படுமா? அல்லது முன்பு இருந்து வந்ததைப் போன்று போட்டித்தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


50 சதவீத இடங்கள்
அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக போட்டித்தேர்வு மூலமாகத்தான் இருக்கும் என்பது பரவலாக நிலவும் கருத்து. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பதிவுமூப்பு முறை ரத்து செய்யப்பட்டால் பல ஆண்டுகளுக்கு முன்பு பி.எட். முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வருடக்கணக்கில் காத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி 50 சதவீத காலி இடங்களை போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத காலி இடங்களை தற்போது பின்பற்றப்பட்டு வரும் சீனியாரிட்டி முறை மூலமாகவும் நிரப்பப்படும் என்றும் ஒருசாரார் கூறுகிறார்கள்.


இவ்வாறு செய்தால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகளுக்கும் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது. அதேபோல், போட்டித்தேர்வு எழுதி ஆசிரியர் வேலை விரும்பும் இளம் பி.எட். பட்டதாரிகளுக்கும் அதிகளவில் பாதிப்பு உண்டாகாது என்றும் அரசு கருதுவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை அறிவிக்கப்படுகிறது
பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிடும் அறிவிப்பில் ஆசிரியர் நியமன முறை பற்றிய விவரம் கண்டிப்பாக இடம்பெறும்.
இது மட்டுமல்லாமல் நடப்பு கல்வி ஆண்டில் எவ்வளவு இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்ற விவரமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் அறிவிப்பை பி.எட். பட்டதாரிகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Monday, August 15, 2011

Revised GO 105



6000 BTs News


5,159 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: திருத்தப்பட்ட புதிய தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது விடுபட்டு போனவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதால் மாற்றம் வரும்



சென்னை, ஆக.10-

அரசு பள்ளிகளில் 5,159 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. பதிவுமூப்பில் பெயர் விடுபட்ட போன 76 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதால் பழைய பட்டியலில் சற்று மாற்றம் வரக்கூடும்.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்

கடந்த ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர். அதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாகவே தேர்வுசெய்யப்பட்டார்கள்.

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, 2010-2011-ம் கல்வி ஆண்டுக்கு 5,159 பட்டதாரி ஆசிரியர்கள் பதிவுமூப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் 2,804 பேர் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கும், 1,155 பேர் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கும், 1,200 பேர் மத்திய இடைநிலை கல்வி திட்டத்திற்கும் (ஆர்.எம்.எஸ்.ஏ.) தேர்வு பெற்றனர். தேர்வுபட்டியல் 28.2.2011 அன்று வெளியிடப்பட்டது. அவர்களுக்கு பணிநியமன ஆணை அனுப்பப்பட இருந்த நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பணி ஆணை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது.

வேலை நிச்சயம்

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வுபெற்ற 5,159 பேருக்கும் இன்னமும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. அரசு, ஆசிரியர் நியமனத்தில் போட்டித்தேர்வு நடத்தும் முறையை கடைப்பிடிக்கும் என்பதால், ஏற்கனவே நடந்த இந்த பணிநியமனம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு ïகங்களும், சந்தேகங்களும் கிளம்பின.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பணிநியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி.சபீதா உறுதி அளித்தார். இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் பதிவுமூப்பில் பெயர் விடுபட்டபோன 76 பேர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென கடந்த 4-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது.

திருத்தப்பட்ட புதிய பட்டியல்

பெயர் விடுபட்டு போனவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டிருப்பதால் அவர்களில் அதிக பதிவுமூப்பு உள்ளவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலில் சற்று மாறுதல் வரக்கூடும். இதையடுத்து, 5,159 பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

ஏற்கெனவே வெளியான தேர்வுபட்டியலில் இடம்பெற்று புதிய தேர்வு பட்டியலில் இடம்பெறாமல் போனாலும் ஒருசில மாநகராட்சி பள்ளிகளில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய காலி இடங்கள் காரணமாக அவர்களுக்கு பாதிப்பு ஏதும் வராது என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.