Monday, August 15, 2011

6000 BTs News


5,159 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: திருத்தப்பட்ட புதிய தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது விடுபட்டு போனவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதால் மாற்றம் வரும்



சென்னை, ஆக.10-

அரசு பள்ளிகளில் 5,159 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. பதிவுமூப்பில் பெயர் விடுபட்ட போன 76 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதால் பழைய பட்டியலில் சற்று மாற்றம் வரக்கூடும்.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்

கடந்த ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர். அதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாகவே தேர்வுசெய்யப்பட்டார்கள்.

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, 2010-2011-ம் கல்வி ஆண்டுக்கு 5,159 பட்டதாரி ஆசிரியர்கள் பதிவுமூப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் 2,804 பேர் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கும், 1,155 பேர் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கும், 1,200 பேர் மத்திய இடைநிலை கல்வி திட்டத்திற்கும் (ஆர்.எம்.எஸ்.ஏ.) தேர்வு பெற்றனர். தேர்வுபட்டியல் 28.2.2011 அன்று வெளியிடப்பட்டது. அவர்களுக்கு பணிநியமன ஆணை அனுப்பப்பட இருந்த நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பணி ஆணை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது.

வேலை நிச்சயம்

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வுபெற்ற 5,159 பேருக்கும் இன்னமும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. அரசு, ஆசிரியர் நியமனத்தில் போட்டித்தேர்வு நடத்தும் முறையை கடைப்பிடிக்கும் என்பதால், ஏற்கனவே நடந்த இந்த பணிநியமனம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு ïகங்களும், சந்தேகங்களும் கிளம்பின.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பணிநியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி.சபீதா உறுதி அளித்தார். இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் பதிவுமூப்பில் பெயர் விடுபட்டபோன 76 பேர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென கடந்த 4-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது.

திருத்தப்பட்ட புதிய பட்டியல்

பெயர் விடுபட்டு போனவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டிருப்பதால் அவர்களில் அதிக பதிவுமூப்பு உள்ளவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலில் சற்று மாறுதல் வரக்கூடும். இதையடுத்து, 5,159 பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

ஏற்கெனவே வெளியான தேர்வுபட்டியலில் இடம்பெற்று புதிய தேர்வு பட்டியலில் இடம்பெறாமல் போனாலும் ஒருசில மாநகராட்சி பள்ளிகளில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய காலி இடங்கள் காரணமாக அவர்களுக்கு பாதிப்பு ஏதும் வராது என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment