Wednesday, November 30, 2011


ஆசிரியர் பணிக்கான தகுதியாக மட்டுமே, "டிஇடி' தேர்வு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம்

சென்னை:""ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' (கூஞுச்ஞிடஞுணூ உடூடிஞ்டிஞடிடூடிtதூ கூஞுண்t) தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு; அவ்வளவு தான். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும். வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.

அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும். விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள். இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது. இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.இவ்வாறு, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
முதல் தேர்வு எப்போது?
மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ள
னர்.

Tuesday, November 29, 2011

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களை நடத்தும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, இந்த வகை தேர்வு தேர்ச்சியை ஒரு தகுதியாகக் கொண்டு, தேர்வு செய்ய வேண்டும்.அதன்படி, இந்த வகை தேர்வை, தமிழக அளவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

குழப்பங்களுக்கான காரணம்
♦  ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்வு முறையில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் கணக்கில் கொள்ளப்படுமா என்பது குறித்து, எதுவும் அறிவிக்கவில்லை.

♦  ஆசிரியர் பயிற்றுனர்கள், தொடர்ந்து போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வகை ஆசிரியர்கள், வழக்கமான போட்டித் தேர்வுடன், ஆசிரியர் தகுதித் தேர்வையும் எழுத
வேண்டுமா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வை மட்டும் எழுதினால் போதுமா என்பது குறித்தும் அறிவிப்பு கிடையாது.

♦  ஆசிரியர் தகுதித் தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள், தகுதி பெறுகின்றனர் என்றால், காலிப் பணியிடங்களை விட அதிகமானவர்கள், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தால், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

ஆசிரியர் சங்கம் கருத்து:அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்னிந்திய செயலர் அண்ணாமலை இதுகுறித்து கூறும்போது, ""அரசாணையில், சில குழப்பங்கள் இருப்பது உண்மை தான்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது, ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள ஒரு தகுதியாக இருக்க வேண்டும் என்று தான், மத்திய அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை தேர்வு மூலமே, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை,'' என்றார்.

மேலும், ""காலிப் பணியிடங்களை விட, அதிகமான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால், அனைவரும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படுவர். பிற மாநிலங்களில் இப்படி தான் நடக்கிறது,'' என்றார்.
தேர்வு வாரியமும் குழப்பம் : பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் கீழ், கணிதம் - அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கும், மொழித்தாள் ஒன்றில் 30 மதிப்பெண்கள், மொழித்தாள் இரண்டில், 30 மதிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் மன நலன் தொடர்பாக, 30 மதிப்பெண்கள் என, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகளை கேட்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில், மொழிப்பாட ஆசிரியர்கள் என்று வரும்போது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்தே, 150 மதிப்பெண்களுக்கான கேள்விகளையும் கேட்க வேண்டுமா; இவர்களிடம், கணிதம் - அறிவியல் மற்றும் சமூகக் கல்வி தொடர்பான 60 மதிப்பெண்களுக்கு, எப்படி கேள்வி கேட்பது எனத் தெரியாமல், தேர்வு வாரியம் குழப்பத்தில் இருந்து வருகிறது. இந்த குழப்பங்களுக்கு விளக்கம் கேட்டு, அரசுக்கு, தேர்வு வாரியம் கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தால் தான், புதிய ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள சிக்கல்கள் தீரும்.

மொழிக்கென தனி ஆசிரியர்:வட மாநிலங்களில், பட்டதாரி ஆசிரியர்களில், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் என, தனியாக கிடையாது. பிற பாடங்களின் ஆசிரியர்களே, மொழிப் பாடங்களையும் நடத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், மொழிப் பாடங்களுக்கு என, தனியாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
-ஏ.சங்கரன்-
Share  


எழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, நவ.29: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 எனினும், 2010-11 ஆம் ஆண்டுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 1,247 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 நடப்பாண்டுக்கு (2011-12) அறிவிக்கப்பட உள்ள பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
 உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆண்டிலிருந்து தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 இந்தத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
 இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன முறையை மாற்றி பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
 அதன் விவரம்: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யும் முறையை அரசு கவனத்துடன் பரிசீலித்தது. பரிசீலனைக்குப் பிறகு, முதுகலை ஆசிரியர் நியமனம் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 எனவே, எழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆணையிடப்படுகிறது. இந்த ஆணையை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 23, 2011

News for selected DSE & DEE candidates

Selected DSE & DEE Candidates Counselling will be conducted by 2nd week of December-2011

Monday, November 21, 2011



பட்டதாரிகளுக்கும் வேட்டு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் விரைவில் அறிவிக்க அரசு திட்டம்


சென்னை, நவ.21:
அரசு பள்ளிகளில் இனிமேல் ஆசிரியர் வேலையில் சேர கட்டாயமாக �ஆசிரியர் தகுதி தேர்வு� எழுத வேண்டும். இதுகுறித்து விரைவில் அரசு ஆணை வெளியிட உள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ல் பிரிவு 23ல் துணைப் பிரிவு 1ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் குறைந்த பட்ச தகுதியை வரையறுத்து செயல்படுத்த உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த மார்ச் மாதம் என்சிடிஇ வெளியிட்டது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்:
தொடக்க கல்வி வழங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், கண்டிப்பாக �ஆசிரியர் தகுதி தேர்வில்� தேர்ச்சி அடைய வேண்டும்.
1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிக்கு (இடைநிலை ஆசிரியர்) ஆசிரியராக செல்வோர், ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும். அதேபோல 6 முதல் 8 வகுப்புகள் உள்ள நடுநிலை பள்ளிகளில் (பட்டதாரி ஆசிரியர்) ஆசிரியர்களாக செல்வோர் ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும். இதுதவிர 1 முதல் 8 வகுப்புகள் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக செல்வோர் இரண்டு தகுதி தேர்வுகளையும் எழுத வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்கள் உடையதாக இருக்கும். இந்த தேர்வுகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெறுவோரே தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவர்.
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அல்லது போதிய மதிப்பெண்கள் பெறாதவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தகுதித் தேர்வை எழுதலாம்.
தகுதி அடைந்தவர்கள் மீண்டும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவோ அல்லது கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினாலும் மீண்டும் தேர்வு எழுதலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றுகளை தேர்வு நடத்தும் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு என்சிடிஇ தனது வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வந்தது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கட்டாய இலவச கல்வி சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டது.
என்சிடிஇ கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும். ஆசிரியர் தகுதி தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தவும், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Thursday, November 17, 2011


முப்பருவ, தொடர் மதிப்பீட்டு முறைகளுக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்கள்

அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ள முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறைக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சமச்சீர் கல்வி புத்தகங்களில் பிழைகளை நீக்குவது,
மேம்படுத்துவது தொடர்பான பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன. இது தொடர்பான அறிக்கைகள் விரைவில் பாடப் புத்தகக் குழுக்களுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்க அரசு முடிவு எடுத்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு வரை உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

எனினும் மாணவர்களுக்குத் தரமான புத்தகங்களையும், கல்வியையும் வழங்குவதற்காக அடுத்த கல்வியாண்டு முதல் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் முப்பருவ முறை, அவர்களை முழுமையாக மதிப்பிடுவதற்காக தொடர் மதிப்பீட்டு முறை உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்காக பிழைகளற்ற, புதிய திட்டங்களை உள்ளடக்கிய புத்தகங்களைத் தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 23 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏறத்தாழ 50 ஆசிரியர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை முழுவதுமாக வாசித்து அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்துக்கு அறிக்கைகள் அனுப்பினர்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ஏறத்தாழ 32 அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்குமான 32 அறிக்கைகளை ஒரே அறிக்கையாக தொகுக்கும் பொறுப்பு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே அறிக்கையாகத் தயாரித்த பிறகு சம்பந்தப்பட்ட பாடநூல் குழுவின் தலைவருக்கு அந்த அறிக்கை அனுப்பப்படும். அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அவரே இறுதி முடிவு எடுப்பார்.

தொடர் மதிப்பீட்டு முறை:
வரும் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் 9,10-ம் வகுப்புகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.

பாடப் புத்தகங்களில் எங்கெங்கு உடனடி மதிப்பீடு மற்றும் மொத்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடப் புத்தகங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்திய தொடர் மதிப்பீட்டு முறையில் உள்ள குறைகளையும், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பாகவும் இவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முப்பருவ முறை: ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு அவற்றை முப்பருவ முறைக்கு ஏற்றவாறு மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் எந்தளவு பாடங்களைச் சேர்க்கலாம் என்பது குறித்து ஒரு குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

பிழைகள் திருத்தப்பட்ட புத்தகங்கள் வந்த பிறகு அவை மூன்றாகப் பிரிக்கப்படும். மூன்றாகப் பிரிக்கப்படும் புத்தகத்தில் தொடர் மதிப்பீட்டு முறைக்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

இறுதியாக அவை சரிபார்க்கப்பட்ட பிறகு புத்தகங்களை அச்சிடுவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் சி.டி.க்கள் ஒப்படைக்கப்படும். 9,10 வகுப்புகளுக்கான புத்தகங்களை அச்சிடும் பணிகள் முதலில் தொடங்கி நடைபெறும். அதன்பிறகு பிற வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடப்படும்.

புத்தகங்கள் அச்சடித்து வந்த பிறகு, தொடர் மதிப்பீட்டு முறையில் எவ்வாறு கல்வி கற்பிப்பது என்பது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
  

Tuesday, November 15, 2011


பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. அதன் அட்டவணை 



தமிழக அரசின் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின் விதிமுறைகள் வெளியீடு

சென்னை : "தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட, நலிந்த பெற்றோரின் குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை, அரசே செலுத்தும்' என, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த இலவச, கட்டாயக் கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இது குறித்து, அரசு கெஜட்டில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கடமைகள்: முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் பள்ளிகள், 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும்.இந்த விதிமுறைக்குள் பள்ளிகளை உருவாக்க முடியாவிட்டால், அரசோ அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளோ, குழந்தைகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவணங்களை பராமரிக்க உத்தரவு: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், அவரவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைப் பற்றிய ஆவணங்களை, முறையாகப் பராமரிக்க வேண்டும். தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள், முறையாக, தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்குச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும்.மாணவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் முகவரி, தொழில், குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆவணங்களில் இடம்பெற வேண்டும்.

லாப நோக்கு கூடாது: பள்ளிகளை, தனியொரு நபராகவோ, கூட்டாகவோ சேர்ந்து, லாப நோக்கத்துடன் நடத்தக் கூடாது. பள்ளிக் கட்டடங்களை, கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதிகாரிகள், எந்நேரத்திலும் பள்ளிகளைச் சோதனையிடலாம். அரசின் விதிமுறைகள்படி, பள்ளிகள் இயங்குகின்றனவா என்பதைக் கண்காணித்தும், அதன்படி நடக்காத போது, பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கலாம்.கட்டண விவகாரம்: கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என, பள்ளி நிர்வாகங்கள் உறுதி அளிக்க வேண்டும். பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள உள் கட்டமைப்பு வசதிகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகக் குழு: அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளி நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும். குழுவில், 75 சதவீதம் பேர், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். 25 சதவீத உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு, விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

துப்புரவு தொழிலாளி குழந்தைக்கு சலுகை : தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணங்களை, இரு தவணைகளாக, அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்குள் உள்ள நலிந்த பெற்றோரின் குழந்தைகள், இலவச, கட்டாயக் கல்வி பெறலாம். அதேபோல், அனாதைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கை குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரும், இலவசக் கட்டாயக் கல்வியைப் பெறும் உரிமைகளைப் பெறுகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து உத்தரவு :இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு, ஏராளமான நிபந்தனைகளை, தமிழக அரசு விதித்துள்ளது.

இது குறித்து, சட்ட விதிமுறையில் அரசு கூறியிருப்பதாவது:* இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009) மற்றும், தமிழக அரசு கொண்டுவந்துள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2011) ஆகியவற்றில் தெரிவித்துள்ள விதிமுறைகளை, பள்ளிகள் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
* தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை (பிரீ-கேஜி மற்றும் முதல் வகுப்பு சேர்க்கையில்), அருகிலுள்ள, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
* தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான கட்டணங்களை, அரசிடம் இருந்து திரும்பப் பெற, தனி வங்கிக் கணக்கு துவக்க வேண்டும்.
* குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குழந்தைகளின் பாதுகாவலர்களிடமோ எவ்வித நன்கொடை கட்டணத்தையும் பெறக் கூடாது.
* ஜாதி, மதம், இனங்களை காரணம் காட்டி, குழந்தைகளைச் சேர்க்க மறுக்கக் கூடாது.
* மாணவர்கள், தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை (எட்டாம் வகுப்பு), எக்காரணம் கொண்டும், அவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது.
* மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனைகளை விதிக்கக் கூடாது.
* தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கக் கூடாது.
* தொடக்கக் கல்வியை முடிக்கும் அனைத்து மாணவர்களும், சான்றிதழைப் பெறும் உரிமையைப் பெறுகின்றனர்.
* அரசு நிர்ணயித்த பாடத் திட்டங்களை மட்டுமே நடத்த வேண்டும். அங்கீகாரம் பெறாத வகுப்புகளை, பள்ளி வளாகத்திற்குள் நடத்தக் கூடாது. பள்ளி கட்டடங்கள், மைதானம் ஆகியவை, கல்வி மற்றும் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* பள்ளியின் வரவு-செலவு தணிக்கை குறித்த அறிக்கைகளை, ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்ப வேண்டும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் நடந்தால், 1 லட்ச ரூபாய் அபராதமும், அதன் பின் ஒவ்வொரு நாளும், 10 ஆயிரம் ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு அவகாசம் : ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெறாதவர்கள், விதிமுறைகள் வெளியிட்ட தேதியில் இருந்து, 5 ஆண்டுகளுக்குள், உரிய தகுதியைப் பெற வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.தனி படிவம்: தனியார் பள்ளிகள், அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான தனி படிவத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழு பக்கங்கள் கொண்ட படிவத்தில், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் முதல், ஆசிரியர்கள், பணியாளர்கள், அவர்களது சம்பளம் உட்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

Monday, November 14, 2011


ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சி லிங் சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை : பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. முதுகலை ஆசிரியர்: மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், 2,612 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,305 பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்களில், உரிய கல்வித் தகுதி மற்றும் பணி மூப்பு உள்ளவர்கள், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான கவுன்சிலிங், 18ம் தேதி, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர்: ஆசிரியர் பயிற்றுனர்களாக இருப்பவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக (இரண்டும் ஒரே தகுதி கொண்ட பணியிடங்கள்) மாறுவதற்கான கவுன்சிலிங் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் ஆகியவை, முறையே 19, 20 ஆகிய தேதிகளில், சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
மிகவும் காலதாமதம்: வழக்கமாக, கல்வியாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர் பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும். கற்பித்தலில் பாதிப்போ, தொய்வோ ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜூன் அல்லது ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும். ஆனால், சமச்சீர் கல்வி பிரச்னையால், பள்ளி திறப்பது தள்ளி வைக்கப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் வினியோகம் உள்ளிட்ட தொடர்ச்சியான பணிகள் இருந்ததாலும், நான்கு மாதங்களுக்குப் பின் இப்போது நடக்கிறது.


இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் சி.வி.சண்முகம்


சென்னை, நவ. 14: மாணவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
 கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அவர் பேசியது:
 நேருவைப் போலவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். குழந்தைகளுக்கு சத்துணவு, இலவச சீருடை மற்றும் இலவச பஸ் பாஸ், பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
 பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி: பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் ரூ.1,890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 ஆசிரியர்கள் நியமனம்: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மட்டும் 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை 5 ஆண்டுகளில் மொத்தம் 58 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் தமிழ்நட்டில் அதற்கான விதிமுறைகள் இயற்றப்படவில்லை. இப்போது விதிமுறைகள் இயற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சண்முகம்.
 பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஸ்ரீதர் விழாவுக்குத் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ப. மணி வரவேற்றார்.
 ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் தேவராஜன், தொடக்கக் கல்வி இயக்குநர் சங்கர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ் செல்வி, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சி லிங் சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது


சென்னை : பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. முதுகலை ஆசிரியர்: மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், 2,612 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,305 பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்களில், உரிய கல்வித் தகுதி மற்றும் பணி மூப்பு உள்ளவர்கள், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான கவுன்சிலிங், 18ம் தேதி, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர்: ஆசிரியர் பயிற்றுனர்களாக இருப்பவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக (இரண்டும் ஒரே தகுதி கொண்ட பணியிடங்கள்) மாறுவதற்கான கவுன்சிலிங் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் ஆகியவை, முறையே 19, 20 ஆகிய தேதிகளில், சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
மிகவும் காலதாமதம்: வழக்கமாக, கல்வியாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர் பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும். கற்பித்தலில் பாதிப்போ, தொய்வோ ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜூன் அல்லது ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும். ஆனால், சமச்சீர் கல்வி பிரச்னையால், பள்ளி திறப்பது தள்ளி வைக்கப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் வினியோகம் உள்ளிட்ட தொடர்ச்சியான பணிகள் இருந்ததாலும், நான்கு மாதங்களுக்குப் பின் இப்போது நடக்கிறது.

Sunday, November 13, 2011

New GO



தொடக்க கல்வி இடைநிலை ஆசிரியர்கள்பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம்


சென்னை:"தொடக்கக் கல்வி இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடைபெறும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வியில் உள்ள 1,743 காலியிடங்களுக்கான தேர்வு குறித்து, கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்தேர்வு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடைபெறும். ஏற்கனவே, மொழி மற்றும் இனவாரியாக இறுதி மூப்பு தேதியுடன் பெறப்பட்ட, பணிநாடுனர்கள் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பங்களை பெறலாம். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், விண்ணப்பம் வேண்டுவோரின் பெயர், வேலை வாய்ப்பகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலில் உள்ளதை உறுதி செய்தபின், விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். இந்த இறுதி மூப்பு தேதி பட்டியல், அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும்.விண்ணப்பங்களை, நாளை முதல் எவ்வித கட்டணம் ஏதுமின்றி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 23ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.