Monday, August 22, 2011


சென்னை, ஆக. 22-
 
சட்டசபையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
 
அதில் கூறி இருப்பதாவது:-
 
ஆசிரியர் தேர்வு வாரியம் http://trb.tn.nic.in என்ற வாரியத்தின் மூலம் காலி பணியிட விவரங்கள், தேர்வு அட்டவணைகள், தேர்வில் பெற்ற மதிப்பெண், வேலை வாய்ப்புக்கு பதிவு மூப்பு தேதி உள்பட பல்வேறு விவரங்கள் பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடப்பட்டு வருகிறது.
 
2010-11-ம் கல்வி ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3665 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். 45 சட்டக்கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும் 161 பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும், 139 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
 
100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் பலனாக 900 முதுகலை ஆசிரியர்களில் முக்கியமாக தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 100 பேர் தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
முதல்-அமைச்சர் தாராள மனதுடன் அளிக்கப்பட்ட ஆயிரம் பணியிடங்களில் 100 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் அடங்கும். பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிரியர் நியமனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
 
தொடக்கப்பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் எந்தவித ஒளிவுமறைவின்றி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment