Monday, November 14, 2011


இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் சி.வி.சண்முகம்


சென்னை, நவ. 14: மாணவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
 கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அவர் பேசியது:
 நேருவைப் போலவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். குழந்தைகளுக்கு சத்துணவு, இலவச சீருடை மற்றும் இலவச பஸ் பாஸ், பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
 பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி: பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் ரூ.1,890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 ஆசிரியர்கள் நியமனம்: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மட்டும் 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை 5 ஆண்டுகளில் மொத்தம் 58 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் தமிழ்நட்டில் அதற்கான விதிமுறைகள் இயற்றப்படவில்லை. இப்போது விதிமுறைகள் இயற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சண்முகம்.
 பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஸ்ரீதர் விழாவுக்குத் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ப. மணி வரவேற்றார்.
 ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் தேவராஜன், தொடக்கக் கல்வி இயக்குநர் சங்கர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ் செல்வி, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment