Monday, November 21, 2011



பட்டதாரிகளுக்கும் வேட்டு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் விரைவில் அறிவிக்க அரசு திட்டம்


சென்னை, நவ.21:
அரசு பள்ளிகளில் இனிமேல் ஆசிரியர் வேலையில் சேர கட்டாயமாக �ஆசிரியர் தகுதி தேர்வு� எழுத வேண்டும். இதுகுறித்து விரைவில் அரசு ஆணை வெளியிட உள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ல் பிரிவு 23ல் துணைப் பிரிவு 1ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் குறைந்த பட்ச தகுதியை வரையறுத்து செயல்படுத்த உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த மார்ச் மாதம் என்சிடிஇ வெளியிட்டது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்:
தொடக்க கல்வி வழங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், கண்டிப்பாக �ஆசிரியர் தகுதி தேர்வில்� தேர்ச்சி அடைய வேண்டும்.
1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிக்கு (இடைநிலை ஆசிரியர்) ஆசிரியராக செல்வோர், ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும். அதேபோல 6 முதல் 8 வகுப்புகள் உள்ள நடுநிலை பள்ளிகளில் (பட்டதாரி ஆசிரியர்) ஆசிரியர்களாக செல்வோர் ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும். இதுதவிர 1 முதல் 8 வகுப்புகள் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக செல்வோர் இரண்டு தகுதி தேர்வுகளையும் எழுத வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்கள் உடையதாக இருக்கும். இந்த தேர்வுகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெறுவோரே தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவர்.
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அல்லது போதிய மதிப்பெண்கள் பெறாதவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தகுதித் தேர்வை எழுதலாம்.
தகுதி அடைந்தவர்கள் மீண்டும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவோ அல்லது கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினாலும் மீண்டும் தேர்வு எழுதலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றுகளை தேர்வு நடத்தும் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு என்சிடிஇ தனது வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வந்தது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கட்டாய இலவச கல்வி சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டது.
என்சிடிஇ கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும். ஆசிரியர் தகுதி தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தவும், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment