Monday, December 19, 2011


"பகுதிநேர ஆசிரியர் நியமனம் நேர்மையாக நடக்க வேண்டும்' : அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், நேர்மையாக நடக்கும்; இதில் ஏதேனும் தவறுகள் நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, "அனைவருக்கும் கல்வி திட்ட' இயக்குனர் முகம்மது அஸ்லம் எச்சரித்து உள்ளார்.
பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 முதல், 8,000 பேர் வரை விண்ணப்பித்து உள்ளனர். மாநிலம் முழுதும், கிட்டதட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, இந்தப் பதவியை பிடிக்க, சிலர் ஆளுங்கட்சி பிரமுகர்களை மொய்த்து வருகின்றனர். மேலும், ஒரே தகுதி நிலையில், ஏராளமானோர் விண்ணப்பித்து இருப்பதால், நியமனம் எப்படி நடக்கும் என்று தெரியாமலும், விண்ணப்பித்தவர்கள் குழம்பிய நிலையில் இருக்கின்றனர்.
தேர்வு எப்படி? : இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி முகம்மது அஸ்லமிடம் கூறியதாவது: இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு மற்றும் பணிக்கான தகுதிகள் அடிப்படையில், நேர்முகத்தேர்வு நடத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நியமனத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் படும். மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில், கலெக்டர்களும் இடம் பெற்றுள்ளனர். தேர்வு முறையை, அவர்கள் முழு அளவில் கவனிப்பர். இவ்வாறு முகம்மது அஸ்லம் கூறினார்.
தகுதியானவர் தேர்வு : ஒரே தகுதி நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால், அவர்களில் தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவர் என்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ""சமமான கல்வித்தகுதி இருந்தால், அவர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் யாருக்கு முன்னுரிமை இருக்கிறது என்று பார்ப்போம். அதிலும் சமமாக இருந்தால், பிறந்த தேதியை பார்ப்போம். இப்படி, பல நிலைகளில் தகுதியின் அடிப்படையிலேயே பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்,'' என்று தெரிவித்தனர். தேர்வில் தவறு நடந்ததாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும், என திட்ட இயக்குனர் எச்சரித்து உள்ளார்.

Saturday, December 17, 2011


9,399 புதிய ஆசிரியர்கள் நியமனம் பட்டியல் தயாரிக்கும் பணியில் பள்ளிக் கல்வி இயக்ககம் தீவிரம்


சென்னை, டிச.17:
பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில் வரும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 9,399 இடங்களில் புதிய ஆசிரியர் களை தெரிவு செய்து தர வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், பள்ளிக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 5,500 உயர்நிலைப் பள்ளிகள், 5,400 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கடந்த ஆண்டு நிலவரப்படி 4,098 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கடந்த ஆண்டில் 1,210, புதிய பணி இடங்கள் 1,305 என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. இது தவிர சிறப்பு ஆசிரியர்கள் 1526 பணியிடங்கள், விவசாய ஆசிரியர் பணியிடங்கள் 25 காலியாக உள்ளன.
மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை இந்த ஆண்டே நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககம் தயாரித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வழங்கியுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் வசதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Monday, December 12, 2011


பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்




திருச்சி, டிச.12-


பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மாநில செயற்குழு கூட்டம்


தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி அன்னதான சமாஜத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் கி.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பி.டி.மனோகரன், இணை செயலாளர் மணி, அமைப்பு செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


இரட்டை தேர்வுமுÛ
தமிழக அரசு தற்போது பட்டதாரி ஆசிரியர் நியமன தகுதி தேர்வு மற்றும் போட்டி தேர்வு ஆகிய இரட்டை தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இரட்டை தேர்வு முறை அறிவித்த அதிர்ச்சியால் மரணம் அடைந்த நாமக்கல் பரமத்தியை சேர்ந்த பத்மநாபன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது,


தற்போது தேர்வு செய்யப்பட்ட 4,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 12 ஆயிரம் பேருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.


முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட 13 ஆயிரத்து 36 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் அனைத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றும் முறையிலேயே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.


போராட்டம்


தமிழக அரசு உடனடியாக இரட்டை தேர்வு முறையை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது, சென்னையில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆதரவோடு மாபெரும் தொடர் உண்ணாவிரதம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் மாவட்ட தலைவர் அரசமணி வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்
பாளர்கள் ரத்தினவேல், ராமதாஸ், சொக்கலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் சங்க தலைவர் முத்துராஜா, மாநில ஆலோசகர் அன்பரசு, தமிழாசிரியர் சங்க தலைவர் ராமு, மாவட்ட செயலாளர் எம்.மணி, பொருளாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, December 7, 2011


13 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, டிச.7-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் 9,471 பட்டதாரி ஆசிரியர்கள், 3,565 இடைநிலை ஆசிரியர்கள் ஆக மொத்தம் 13,036 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Monday, December 5, 2011

ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் உடனடியாக வேலை வழங்க கோரிக்கை

ென்னை:பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள், நேற்று அதிகாரிகளைச் சந்தித்து, உடனடியாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர்.பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்ற, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 4,927 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் முதல், கடந்த ஆகஸ்ட் வரை நடந்த பல்வேறு கட்ட சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின், இறுதித் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

கோரிக்கை:இவர்களில், மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட, 1,200 ஆசிரியர்கள் மட்டும், உடனடியாக பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 3,727 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்குள், சட்டசபைத் தேர்தல் வந்துவிட்டதால், பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன.தேர்தலுக்குப் பின், மீதம் உள்ளவர்களுக்கு தேர்வுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனினும், இன்னும் பணி நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், 60க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஒன்று கூடி, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி, இணை இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி (பணியாளர் தொகுதி) மற்றும் தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் ராமராஜன் ஆகியோரை சந்தித்து, உடனடியாக பணி நியமனம் செய்யக் கோரி வலியுறுத்தினர்.

விரைவில் நியமனம்?விலங்கியல் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ள, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் கூறும்போது, ""ஆசிரியர் பணிக்கான தேர்வுக் கடிங்களைப் பெற்று பல மாதங்கள் ஆகியும், பணி நியமனம் செய்யப்படாதது வேதனை அளிக்கிறது. விரைவில் பணி நியமனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

இணை இயக்குனர் ராமராஜன் கூறும்போது, ""உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இந்தப் பணிகள் முடிந்த பின், புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தேர்வு செய்யப்பட்டஆசிரியர்கள் விவரம்


ஆதிதிராவிடர் நலத்துறை: 152
பள்ளிக் கல்வித்துறை: 2,568
தொடக்கக் கல்வித்துறை: 1,007
------------------------------
மொத்தம்: 3,727