Monday, December 19, 2011


"பகுதிநேர ஆசிரியர் நியமனம் நேர்மையாக நடக்க வேண்டும்' : அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், நேர்மையாக நடக்கும்; இதில் ஏதேனும் தவறுகள் நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, "அனைவருக்கும் கல்வி திட்ட' இயக்குனர் முகம்மது அஸ்லம் எச்சரித்து உள்ளார்.
பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 முதல், 8,000 பேர் வரை விண்ணப்பித்து உள்ளனர். மாநிலம் முழுதும், கிட்டதட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, இந்தப் பதவியை பிடிக்க, சிலர் ஆளுங்கட்சி பிரமுகர்களை மொய்த்து வருகின்றனர். மேலும், ஒரே தகுதி நிலையில், ஏராளமானோர் விண்ணப்பித்து இருப்பதால், நியமனம் எப்படி நடக்கும் என்று தெரியாமலும், விண்ணப்பித்தவர்கள் குழம்பிய நிலையில் இருக்கின்றனர்.
தேர்வு எப்படி? : இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி முகம்மது அஸ்லமிடம் கூறியதாவது: இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு மற்றும் பணிக்கான தகுதிகள் அடிப்படையில், நேர்முகத்தேர்வு நடத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நியமனத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் படும். மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில், கலெக்டர்களும் இடம் பெற்றுள்ளனர். தேர்வு முறையை, அவர்கள் முழு அளவில் கவனிப்பர். இவ்வாறு முகம்மது அஸ்லம் கூறினார்.
தகுதியானவர் தேர்வு : ஒரே தகுதி நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால், அவர்களில் தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவர் என்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ""சமமான கல்வித்தகுதி இருந்தால், அவர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் யாருக்கு முன்னுரிமை இருக்கிறது என்று பார்ப்போம். அதிலும் சமமாக இருந்தால், பிறந்த தேதியை பார்ப்போம். இப்படி, பல நிலைகளில் தகுதியின் அடிப்படையிலேயே பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்,'' என்று தெரிவித்தனர். தேர்வில் தவறு நடந்ததாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும், என திட்ட இயக்குனர் எச்சரித்து உள்ளார்.

1 comment:

  1. MAY THE BLESSINGS OF GOD FILL YOU AND YOUR FAMILY WITH JOY AND PEACE IN THIS NEW YEAR. WISH YOU HAPPY NEW YEAR 2012. GOD GRACE THIS YEAR WE ARE ALL EMPLOYMENT SENIORITY GRADUATE TEACHER GETTING GOVERNMENT TEACHER JOB. I WILL PRAY TO GOD FOR CONTINUE SENIORITY.

    REGARDS,

    P.MUTHUKUMARAN.M.SC.,MA.,(YOGA)MSW.,B.ED.,PGDBA.,PGDCM.,DCA.,DCH.,
    CHENNAI.(9841411594 & muthukumaranp1@gmail.com)

    ReplyDelete