Monday, December 5, 2011

ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் உடனடியாக வேலை வழங்க கோரிக்கை

ென்னை:பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள், நேற்று அதிகாரிகளைச் சந்தித்து, உடனடியாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர்.பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்ற, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 4,927 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் முதல், கடந்த ஆகஸ்ட் வரை நடந்த பல்வேறு கட்ட சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின், இறுதித் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

கோரிக்கை:இவர்களில், மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட, 1,200 ஆசிரியர்கள் மட்டும், உடனடியாக பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 3,727 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்குள், சட்டசபைத் தேர்தல் வந்துவிட்டதால், பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன.தேர்தலுக்குப் பின், மீதம் உள்ளவர்களுக்கு தேர்வுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனினும், இன்னும் பணி நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், 60க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஒன்று கூடி, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி, இணை இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி (பணியாளர் தொகுதி) மற்றும் தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் ராமராஜன் ஆகியோரை சந்தித்து, உடனடியாக பணி நியமனம் செய்யக் கோரி வலியுறுத்தினர்.

விரைவில் நியமனம்?விலங்கியல் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ள, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் கூறும்போது, ""ஆசிரியர் பணிக்கான தேர்வுக் கடிங்களைப் பெற்று பல மாதங்கள் ஆகியும், பணி நியமனம் செய்யப்படாதது வேதனை அளிக்கிறது. விரைவில் பணி நியமனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

இணை இயக்குனர் ராமராஜன் கூறும்போது, ""உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இந்தப் பணிகள் முடிந்த பின், புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தேர்வு செய்யப்பட்டஆசிரியர்கள் விவரம்


ஆதிதிராவிடர் நலத்துறை: 152
பள்ளிக் கல்வித்துறை: 2,568
தொடக்கக் கல்வித்துறை: 1,007
------------------------------
மொத்தம்: 3,727

No comments:

Post a Comment